30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்!
நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ -- மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.
தேவை அதிகரிப்பு
நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,
பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
மேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, 'நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், 'நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. 
'தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1, 
பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்' என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
நவ., 20க்குள்:
மேலும், 'மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும் 
ஆலோசனை நடந்து வருகிறது.
பள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் 
திட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.