3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 3,000 அரசுப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

நாமக்கல்லை அடுத்த கருப்பட்டிப்பாளையத்தில் தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காலை நிகழ்ச்சியாக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.ஏ. செங்கோட்டையன், வெ.சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர். சுந்தரம், எஸ்.செல்வக்குமார சின்னையன், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி. சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது, பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களை எதிர்கால இந்தியாவின் சக்திகளாக உருவாக்கிட, பல்வேறு புதிய கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு எத்தனை பொதுத் தேர்வுகளைக் கொண்டு வந்தாலும், அதனை எதிர் கொள்ளும் வகையில், கல்வித் திட்டங்களை நவீனப்படுத்தி வருகிறோம். இம்மாத இறுதியில் 412 இடங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார்.
இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் 3,000 அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் தொடங்க, ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இனி தொடங்கப்படும். மேலும் "நீட்' போன்ற தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள ஆந்திரா, புதுதில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு, காணொளிக் காட்சி மூலம் 412 மையங்களில் கல்வி கற்பிக்கப்படும்.
2013-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாததால், ஆசிரியர் பணி பெற முடியாமல் உள்ளவர்களின் நலனைக் கருதி அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அதற்கென குழு ஒன்று அமைக்கப்பட்டு முதல்வருடன் பேசி முடிவுகள் எடுக்கப்படும் என்றார் கே.ஏ.செங்கோட்டையன்.