ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக்கை... ஹைகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்!

சென்னை : அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார். கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது. எனினும் அரசுஊழியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நீதிமன்றம் கடுமையான கண்டிப்பு காட்டியது. மேலும் உடனடியாக பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.