மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 250ஆக அதிகரிப்பு

மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், தலா 150 மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் முறையில் சேர்க்கப்பட்டனர். இவ்விரு

கல்லுாரிகளும் பழமையானது என்பதால், இங்கு மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. கவுன்சில் விதிப்படி மருத்துவ கல்லுாரியில் 250 மாணவர்களுக்கான நவீன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஆடிட்டோரியம், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதி, முதல்வர் அறை, கூட்ட அரங்கு, நுாலகம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென மத்திய அரசு தனது பங்களிப்பு நிதி ரூ.60 கோடியை இரு கல்லுாரிகளுக்கும் ஒதுக்கியுள்ளது. மாநில ஒதுக்கீடு எங்கே: 2018 ல் 250 மாணவர்கள் சேர்க்கைக்கு, நவம்பருக்குள் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். 2018 மே- மாதத்திற்குள் அதற்கான அங்கீகாரம் கிடைத்தாகவேண்டும். இதற்காக மாநில
அரசு தமது பங்களிப்பு நிதியை இரு மருத்துவ கல்லுாரிகளுக்கும் ஒதுக்கி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

மதுரை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: இரு கல்லுாரிக்கும் மத்திய அரசு பங்களிப்பு
தொகை ஒதுக்கிஉள்ளது. நவம்பருக்குள் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர்
ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளனர். அங்கீகாரத்திற்கு பின், 2018 முதல் 250 மாணவர்கள் சேர்க்கப்படுவர், என்றார்.