235 இடங்கள் காலி வேளாண் பல்கலையில் மீண்டும் கலந்தாய்வு?

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் 13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதில் 931 இடங்கள் நிரப்பப்படாததால், மேலும் இரு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டன. 
இதன் பின்னர் 285 காலியிடங்கள் இருந்ததால், நேற்று முன்தினம் இறுதிகட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வுக்கு 2,112 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். 224 பேர் மட்டும் பங்கேற்றனர். இதில் 167 பேர் தங்களுக்கான இடத்தை விரும்பிய கல்லூரிகளில் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் இரு இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான தகவல் நேற்று முன்தினம் கிடைத்தது. ஒவ்வொரு கல்லூரியிலும் 60 இடங்கள் இருப்பதால், இதில் 39 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களாகும். 
இதையடுத்து இறுதிகட்ட கலந்தாய்வு முடிந்தாலும் மேலும் 235 காலியிடங்கள் இருப்பதாகவும், அந்த இடங்களை நிரப்புவதற்காக மீண்டும் கலந்தாய்வு நடத்தலாமா என்பது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று பல்கலை டீன் மகிமைராஜா தெரிவித்துள்ளார்.