தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு
வெளியிட்டது. இந்த அரசாணையில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி போட்டித்தேர்வு
மூலம் நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளிகளில் நிரப்பப்படும்.
போட்டித்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில் 195 கேள்வி
கேட்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ், வேலைவாய்ப்பு பதிவு உள்ளிட்டவை
அடிப்படையாக கொண்டு 5 மதிப்பெண் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
சார்பில் தயாரித்த சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வு நடத்தவில்லை. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்
நிரந்தர சிறப்பாசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
இதனால், தமிழக பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்
பணியிடம் காலியாக உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற
செங்கோட்டையன், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆகிய 4 பாடங்களில் 1,188
பணியிடம், விவசாய பாடத்தில் 25 பணியிடம் என 1,123 பணியிடம் டிஆர்பி
எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றார். இந்த
தேர்வு, வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்க, காலஅட்டவணை
குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
2012ம் ஆண்டு வரை நடந்த நிரந்தர சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், 1985ம்
ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 753ன்படி கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு
தேர்ச்சி, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி, தொழிலாசிரியர் சான்றிதழ்
பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு, முன்னுரிமை இனசுழற்சி ஆகிய
அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது.
சிறப்பாசிரியர் நியமனத்திற்கு இதே கல்வித்தகுதியை அரசாணை 185ஐ கூறுகிறது.
ஆனால், தற்போது டிஆர்பி இணையதளத்தில் சிறப்பாசிரியர் போட்டி தேர்வுக்கு
விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
தேர்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, அரசாணை கூறிய கல்வித்தகுதி
தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்கள் அடிப்படையான
அரசு தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி குறித்து டிஆர்பி இணையதளத்தில்
தெரிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இரு முக்கிய கல்வித்தகுதி
குறிப்பிடப்படாததால், தேர்வர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக டி.டி.சி பயிற்சி நடத்தாமல் உள்ளது.
டி.டி.சி கல்வித்தகுதி அவசியம் என்றால், 20 ஆயிரம் பேர்
விண்ணப்பிப்பார்கள்.
டி.டி.சி கல்வித்தகுதி இல்லையென்றால், அதனை முடிக்காத பகுதிநேர ஆசிரியர்கள்
உள்பட 1.50 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அரசாணை தொழில்நுட்ப தேர்வு தேர்ச்சி, டி.டி.சி பயிற்சி கல்வித்தகுதி
எனக்கூறும் நிலையில், டிஆர்பி கல்வித்தகுதியை வெளியிட்டு தேர்வர்களுக்கு
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழப்பமான அறிவிப்பு உள்ளதால் தேர்வர்கள்
தேர்வு எழுத முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக,
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆசிரியர் தேர்வு
வாரியம் விளக்கம் அளிக்கவேண்டும் என தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை
வலுத்துள்ளது.