''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- -
ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில
தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளை ஒழித்து அனைவருக்கும்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பு (ஜாக்டோ--ஜியோ)
சார்பில் தொடர் போராட்டங்கள் நடக்கிறது.
இதன் ஒருபகுதியாக ஆக.,22ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில்,
தமிழகத்தில் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
பங்கேற்கின்றனர்.
போலீஸ் துறை அமைச்சு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள், தலைமை செயலக
ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் தாலுகா தலைமையகத்தில்
ஆர்ப்பாட்டம் நடக்கும்.அதன்பிறகும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு தீர்வு
காணாவிட்டால் ஆக.,27 ல் மாவட்டங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
நடத்தப்படும்.
இறுதியாக செப்.,9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
நடக்கும்.''போராட்டத்தில் ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை பாயும்.
சம்பளம் பிடித்தம் செய்யப்படும்'', என தலைமை செயலாளர் கிரிஜாவைத்திய நாதன்
எச்சரித்துள்ளார். மிரட்டல்களுக்கு ஒருபோதும் பயப்பட
மாட்டோம்.பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், மிரட்டுவது சரியல்ல.இவ்வாறு அவர்
கூறினார்.