'காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி

ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.


தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.72 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு நிறுவனமும், தங்களின் ஏஜன்சிகள் வாயிலாக, சிலிண்டர் சப்ளை செய்கின்றன.

ஏஜன்சி ஊழியர்கள், வாடிக்கையாளரிடம், ஒரு சிலிண்டர் சப்ளை செய்ய, 30 - 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர். அதை தர மறுத்தால், 'வீட்டில் ஆட்கள் இல்லை' எனக்கூறி, சிலிண்டர் பதிவை ரத்து செய்கின்றனர்.சில ஏஜன்சிகள், உரிய ஆவணங்களை வழங்கினாலும், சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்கின்றன. காஸ் கசிவு காரணமாக, புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வாடிக்கையாளர், விரும்பிய எண்ணெய் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தை, மத்திய அரசு, 2014ல் துவக்கியது. ஆனாலும், இதுகுறித்து, தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விரும்பிய நிறுவனம் அல்லது ஏஜன்சிக்கு மாறும் சேவையை பெற, வாடிக்கையாளர்கள், தற்போது உள்ள தங்கள் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். பின், ஏற்கனவே உள்ள ஏஜன்சிக்கு சென்று, சிலிண்டரை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவர் செலுத்திய, 'டிபாசிட்' தொகை மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அவற்றை எடுத்து கொண்டு, விரும்பிய நிறுவனத்தின் ஏஜன்சியிடம் ஒப்படைத்து, புதிய இணைப்பை பெறலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ததுமே, அதற்கான வழிமுறைகள், வாடிக்கையாளரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படும்.ஏஜன்சி சேவையில் திருப்தி இல்லாதவர்கள், விரும்பிய நிறுவனத்திற்கு மாற முயற்சித்தால் தான், அதற்கான காரணத்தை கேட்டு, ஏஜன்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அத்திட்டம் குறித்து, வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.