விடுமுறை நாட்களில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகே வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
* தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் யாரும் அருகே செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* மழையின் காரணமாக பள்ளியில் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அத்தகைய வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பூட்டிவைப்பதுடன் அதன் அருகே மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மின்
இணைப்பு துண்டிப்பு
* மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின்கசிவு, மின்சுற்று கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின்இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவிடலாம். அதோடு மின்வாரிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்து பழுதுகளைச் சரிசெய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தின் அருகில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்த வெளி கிணறுகள் மற்றும் பள்ளியில் உள்ள கழிவுநீர்த்தொட்டிகள் இருந்தால் அவற்றை மூடப்பட்டுள்ள நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* விடுமுறை நாட்களில் ஆழ மான ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
* மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விடுமுறை நாட்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுரை அளிக்க வேண்டும்.
* பள்ளியை விட்டுச்செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடுவதோ அல்லது அதன் அருகில் செல்லவோ கூடாது என மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
அறுந்த மின்கம்பிகள்
* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தாலும் அதேபோல், அறுந்து தொங்கக்கூடிய நிலையில் மின்கம்பிகள் இரு்நதாலும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
* சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வுசெய்வதுடன் மாணவர்களைக் கொண்டு எந்த மின்சாதனங்களையும் இயக்கக் கூடாது.
இடி,
மின்னல்
* மழைக்காலங்களில் மழை யில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக்கூடாது என்றும் அதுபோன்று ஒதுங்கினால் இடி, மின்னல் போன்றவற்றால் ஆபத்து நேரிடலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.