நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு
தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்,
ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட
கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது.நிகர்நிலை பல்கலைகளில் உள்ள
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன்
முடிவடைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி
கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங்,
எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட
மாணவர்களுக்கு வழங்கிய,85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை
எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு,
இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில்
துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும்
மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க
வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.