உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீதும், பள்ளிக் கல்வி மீதும் ஆர்வம் கொண்ட உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையில்
பொறுப்பேற்றிருப்பதைப் பலரும் வரவேற்றார்கள். கல்வித் துறையில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. 
அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உதயசந்திரனின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார். பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறைக்கு விடை கொடுத்தார். பாடத்திட்டங்களை உருவாக்குவதில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார். இப்படியாகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
உதயசந்திரன் கல்வித் துறையில் செய்துவரும் நடவடிக்கைகள் கல்வியாளர்ளிடமிருந்து மட்டுமல்ல எதிர்க்கட்சியினரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக, கல்வித் துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வெளிப்படைத் தன்மை ஆட்சியில் உள்ள சிலருக்குப் பிடிக்க வில்லை என்றும் அதனால், உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பணி மாற்றம் செய்யப்படலாம் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இரு வாரங்களாக இந்தச் செய்தி உலவி வந்தாலும் கடந்த இரு நாள்களாக இது ஆசிரியர்களிடையே பேசும் பொருளாகி உள்ளது. பல ஆசிரியர்கள் வெளிப்படையாக உதயசந்திரனை மாற்றக்கூடாது எனச் சமூக ஊடகங்கள் வழியே வலியுறுத்தி வருகின்றனர். இதற்கென ஒரு ஹேஷ் டேக்கை (#stand_with_Udayachandran_IAS) உருவாக்கி, பகிர்ந்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை செயலாளரை ஏன் மாற்றக்கூடாது என நினைக்கிறீர்கள்? என, சில ஆசிரியர்களிடம் கேட்டோம்.
Vasanth

வசந்த், ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீரனூர்: "உதயசந்திரன் சார் பணி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இவ்வளவு நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவர் நீடித்தால் இன்னும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். முதல் இடம், இரண்டாம் இடம் என அறிவிப்பை ரத்து செய்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பள்ளியிலும் வகுப்பிலும் மாணவர்களோடு பழகுவதில் மாற்றங்களைக் கொண்டு வர முயலும் ஆசிரியர்களுக்குப் பல தடைகள் இருந்தன. வட்ட, மாவட்ட அளவிலான அதிகாரிகளையே நாங்கள் தொடர்புகொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், உதயசந்திரன் சாரை எளிதாகத் தொடர்புகொள்ள முடிவதும் எங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. அவர் கூறும் வழிகாட்டலை எங்கள் வகுப்பறையில் செயல்படுத்தினோம். அதனால், வகுப்பறையின் இறுக்கம் தளர்ந்தது. இந்த நல்ல போக்கு நீடிக்க வேண்டும் என்பதாலே அவர் இந்தப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறோம். இதைக் கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்களிடம் நேரில் சென்றுகூட வலியுறுத்த தயாராக இருக்கிறோம். "
dhileep

mahalaxmi

மகாலட்சுமி: ஆசிரியர், ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளி, ஜவ்வாது மலை, திருவண்ணாமலை: "உதயசந்திரன் சார், பொறுப்பேற்றுச் செய்த நடவடிக்கைகளே புத்தகங்களை மகிழ்ச்சியோடு படிக்கிற நிலையை மாணவர்களுக்குத் தந்திருக்கிறது. மாற்றங்களைச் செய்ய விரும்புகிற ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். அவர்களை ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டினாலும் அவர்களின் சிந்தனை மற்றவர்களுக்குப் பயன்தரும் விதத்தில் கடத்தப்பட வில்லை. இந்நிலையில் கல்வித் துறை செயலளாரால் எங்களுக்குள் ஓர் உரையாடல் நடைபெற்றது. அப்போது, பலவித கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வகுப்பறையில் அவை பிரதிபலிக்கவும் செய்கின்றன. இது உயிர்ப்புடன் இயங்கும் ஆசிரியர்களின் ஓட்டத்தை இன்னும் வேகமெடுக்க வைத்திருக்கிறது. முதல் இடங்களை அறிவிப்பதை ஒழித்து மூலம் அதையே விளம்பரம் செய்து மாணவர்களை ஈர்க்கும் பள்ளிகள் எரிச்சலடைந்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது கூடுதல் நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நம்பிக்கை பயணம் தொடர வேண்டும் எனில் உதயசந்திரன் சார் இந்தப் பணியில் குறிப்பிட்ட வருடங்களுக்கு நீடிக்க வேண்டும்."
sathish kumar

சி.சதீஷ்குமார், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்பனைக்காடு, புதுக்கோட்டை மாவட்டம்: "உதயசந்திரன் சார் பொறுப்பேற்றதும்தான் கல்வித் துறை மீது பொதுமக்களுக்கு நல்ல மதிப்பு வந்திருக்கிறது. அதன் நீட்சியாக ஆசிரியர்கள் மீது கணிவும் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம் எனும் நம்பிக்கையும் வந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மகிழ்ச்சியோடு தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இந்த ஆரோக்கியமான போக்கு நீடிக்க வேண்டுமெனில், இவர் இந்தப் பொறுப்பில் தொடர வேண்டும். உதயசந்திரன் சார் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் எனும் செய்தி வதந்தி என்றால் அரசுப் பொறுப்பில் உள்ளவர் தக்க பதிலளித்து, சந்தேகத்தைப் போக்க வேண்டும். ஒருவேளை, இவர் பணி மாறுதல் செய்யப்பட்டால், அதற்கு எதிராக வரும் முதல் குரலாக என்னுடையதுதான் இருக்கும். இதற்காக ஒரு துளி தயக்கம்கூட எனக்கு இல்லை."கல்வித்துறையின் மாற்றங்கள் முழுமையடைய அரசு உதவ வேண்டும்.