சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர். இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ  (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன. பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.