அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை தடைசெய்ய எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

தஞ்சாவூரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதை எதிர்த்து அந்த பள்ளி நிர்வாகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–


தங்கள் பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற பள்ளிகள் எவை? என்பதுகூட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவது இல்லை. அங்கீகாரமற்ற பள்ளிகள் ஒப்புதல் கோரி விண்ணப்பம் செய்யும்போது தான் அதிகாரிகள் விழித்துக்கொள்கின்றனர்.

கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அங்கீகாரமற்ற பள்ளிகள் ஒப்புதல் கோரும்போது அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறதா? என்பதை அதிகாரிகள் ஏன் முறையாக ஆய்வு செய்வதில்லை? அதுபோல விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?

பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்று செயல்படும் தனியார் பள்ளிக்கூடங்கள் எத்தனை? அவைகளை தடைசெய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? அதற்கான சட்டரீதியிலான வேறு வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு 16–ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.