காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தால் பட்டம் கிடைக்காது

ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., படிக்கும் பட்டதாரிகள், மற்றவர்களின் ஆராய்ச்சி கட்டுரையை காப்பியடித்தால், பட்டம் கிடைக்காது என, பல்கலைகள் எச்சரித்துள்ளன.

பல்கலைகளில், பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள், தங்கள் துறை தொடர்பாக, ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது, 'வைவா வாஸ்' என்ற, வாய்மொழி விளக்க கருத்தரங்கம் நடத்த வேண்டும். அதேபோல, கட்டுரைகளை, பல்கலைகழக மானியக்குழுவான, யு.ஜி.சி., அங்கீகரித்த இதழ்களில் வெளியிட வேண்டும்.



புகார் : இந்நிலையில், பல ஆராய்ச்சி மாணவர்கள், ஏற்கனவே வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் போல, சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலி கட்டுரைகளை கண்டுபிடிக்க, தமிழக பல்கலைகளுக்கு, புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் செயல்படும், 'இன்பிலிப்நெட்' என்ற, தகவல் மற்றும் நுாலக நெட்வொர்க் என்ற, மத்திய அரசு நிறுவனம், இந்த சாப்ட்வேரை வழங்கி உள்ளது.அதன்படி, 'தமிழக பல்கலைகள், தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை, இந்த புதிய சாப்ட்வேரில் இணைத்து, காப்பியடிக்கப்பட்டதா என, கண்டுபிடிக்க வேண்டும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. 

உத்தரவு : மேலும், மற்றவர்களின் கட்டுரைகளை காப்பியடித்தால், அந்த பட்டதாரிகளுக்கு, பிஎச்.டி., பட்டம் வழங்கக்கூடாது என்றும், அவர்களின் பெயர் பட்டியலை தனியாக தயாரிக்க வேண்டும் என்றும், பல்கலைகளின் துறை அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.