படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : செங்கோட்டையன் தகவல்

வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

பெரம்பலூரில், அரசு சார்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவ, மாணவியர் எத்தகைய போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கேள்வி, பதில்கள் அடங்கிய வினா, விடை புத்தகம் தயாரிக்கப்பட்டு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்று போவதும் மரணத்திற்கு சமமானதுதான். எனவே மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளுக்கு முயற்சிப்பதை நிறுத்தக்கூடாது. வரும் ஆண்டுகளில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அலைச்சலை குறைக்கும்விதமாக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு நடத்த ஏதுவாக  தேர்வு மையங்களை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.