அரசுப் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிய அனுமதி மறுப்பு!

தற்போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிந்து வர அனுமதி உண்டு. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் பலர் சுரிதார் அணிந்து கொண்டு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதையொட்டி அரசுப் பள்ளி ஆசிரியைகள் சார்பாகவும், பணியிடத்தில் செளகரியமாக உணர்வதற்காக வேண்டி அதே போன்றதொரு கோரிக்கை முன் வைக்கப் பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை நிராகரித்துள்ளது.

பணியிடங்களில் புடவை மட்டுமே அணிய வேண்டுமென்பதை சில ஆசிரியைகள் விரும்பாமலிருக்கலாம், அவர்களைக் கட்டாயப் படுத்தி புடவை அணியச் சொல்வதைக் காட்டிலும் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையான சுரிதார் அணிந்து கொள்ள விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றலாமே எனும் கோரிக்கை ஆசிரியைகள் சார்பாக ஆன்லைன் பெட்டிஷன் முறையில் முத்துகிருஷ்ணன் என்பரால் முதல்வரின் தனி செல்லுக்கு அனுப்பப்பட்டது. அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சுரிதார் அணிய உரிமை உண்டு என்பதைப் போலவே ஆசிரியைகளின் இந்தக் கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் ஆசிரியைகளின் அந்தக் கோரிக்கை தற்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நிராகரிக்கப் பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுரிதார் அணிந்து கொள்ளலாம் எனும் மாற்றம் அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறானது. எனவே தற்போது அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

அதோடு, பணியிடங்களில் சுரிதார் அணிந்து கொள்ள விரும்புவதாக இதுவரை எந்த ஒரு பெண் ஆசிரியரிடத்திலிருந்தும் தங்களுக்கு வேண்டுகோள் வரவில்லை என்பதால் தற்போதைக்கு முத்துகிருஷ்ணன் என்பவர் ஆசிரியைகள் சார்பாக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.