தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை

தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லைசென்னை,


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய முரண்பாடுகளை களைவது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று நடத்தியது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களுக்கு ஒருநாள் சம்பளத்தை ரத்து செய்யவேண்டும் என்று அரசுத் துறைத் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியிருந்தார். மேலும், போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 5.44 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 2.58 லட்சம் பேர் நேற்று பணிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டனர். 2.67 லட்சம் பேர் அலுவலகத்துக்கு வரவில்லை. மீதமுள்ள 16 ஆயிரத்து 890 பேர் பல்வேறு வகையான விடுப்பில் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 49.6 சதவீதம் பேர் வேலைக்கு வரவில்லை. 47.52 பேர் வேலைக்கு வந்திருந்தனர். தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை 90 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். இவர்களில் பெண்கள் அதிகம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.