புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு

புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என, இரு குழுக்களை, தமிழக அரசு அமைத்துள்ளது. 


இந்தக் குழுக்களின் ஆலோசனை கூட்டம், ஜூலையில் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாவது முறையாக, டி.பி.ஐ., வளாகத்தில், கலைத்திட்டக்குழு கூடி ஆலோசித்தது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடமும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி, வரும், 9ல், மதுரை; 11ல், கோவை; 22ல், சென்னை; 24ல், தஞ்சாவூர் என, நான்கு இடங்களில் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி விபரம் பெறலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, பாடத்திட்டம் குறித்து, கருத்துக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.