2516 அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண்களிடமிருந்து மட்டும் புதன்கிழமை (ஆக. 23) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் 1268, குறு அங்கன்வாடி பணியாளர்கள் 38 மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் 1210 என மொத்தம் 2516 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர் பணியிடத்துக்கு உள்ளூரில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறுமைய அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 01.07.2017 அன்று 25 வயது முதல் 35 வரை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் இனசுழற்சி விவரம் ஆகியவை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரக விளம்பர பலகைகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை www.vellore.tn.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சான்றுகளின் நகல்களுடன் மற்றும் இதர ஆவணங்களுடனும் ஆக. 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை ரசீது வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.