தேசிய அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள 2020க்குள் எல்லா வகுப்புகளுக்கும் புது பாடத்திட்டம் : ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் 2020ம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய புத்தகங்கள் அச்சடித்து
முடிக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க கல்விதுறை அமைச்சர், பள்ளி கல்வி துறை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு இரண்டு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. இந்த குழுக்களை நீதிமன்றம் கண்காணிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவது, மேம்படுத்துவது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி கல்விதுறை செயலாளர் உதயசந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். மாநிலத்தின் புதிய பாடத்திட்டம் தமிழ் மொழிக்கு முக்கியதுவம் கொடுத்து சிபிஎஸ்இ யை விட சிறப்பாக அமைக்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை சேர்த்து புதிய பாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பாட புத்தகங்கள்  2018-ம் ஆண்டு மே மாதம் 1,6,9,11 வகுப்புகளுக்கு வினியோகிக்கபடும். வரும் 2019 மே மாதம் 2,7,10,12 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிந்து புத்தங்கள் வழங்க தயாராக வைக்கப்படும். 2020 மே மாதம் 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்க தயாராக வைக்கப்படும்.
வரும் 2020 மே மாதத்தில் புதிய பாடதிட்டத்திற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிக்கப்படும். இதேபோல மின்னணு புத்தகங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிஎஸ்இயை விட சிறப்பான தரத்துடன் அமைந்திருக்கும். இந்த பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கருத்து கேட்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் பயிற்றுவிற்கும் திறனை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவியாக 11 வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள்  நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்ள ஆங்கிலத்தில் உள்ள நீட் தேர்வு புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க ₹5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுகுழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த பட்டியலையும் செயலாளர் உதயச்சத்திரன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதி விசாரணையை வரும் செப்டம்பர் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.