சென்னை: கன்னி ராசியில் கடந்த ஓராண்டுகளாக சஞ்சாரித்து வந்த குரு பகவான்
இன்னும் சில தினங்களில் துலாம் ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி
வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிகழ
உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 12ஆம் தேதி செவ்வாய்கிழமை
காலை 6.50 மணிக்கு நிகழ உள்ளது.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர்
எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். குரு பகவான் ஒருவரின்
ஜாதகத்தில் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.
அதனால்தான் ' குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்கிறார்கள். சக்தியும்
பலமும் வாய்ந்தது குருவின் பார்வை.
குரு
பெயர்ச்சியினால் சாதக பலன்கள் அதிகரித்து பாதக பலன்கள் குறைவதற்கு ஒவ்வொரு
வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு
ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் நவக் கிரக
குருவை அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் உண்டாகும். 12 ராசிகளுக்கும்
குரு பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம்.
மேஷம்:
தைரியம்,
வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு காரகரான செவ்வாயை
அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு தரும்
பலன்களைப் பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான
குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக்
குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல்
தந்தவர், களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு
பலன்கள் ஏற்படும்.
பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
மனைவியின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவர்
மகிழ்ச்சியடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொழில் தொடர்புகள்
நல்ல வருமானத்தைத் தரும். சொகுசு மிகுந்த வாகனங்கள் வாங்கும் யோகம்
உண்டாகும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்
வாய்ப்பு உண்டாகும். புதிதாக வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம்
உண்டாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மாணவ
மாணவிகளின் கல்வி நிலை மேன்மையடையும். தொழில் வியாபாரம் சம்பந்தமான
வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். தொழிலில் தன வரவு அதிகரிக்கும். கூட்டுத்
தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உங்கள் தொழில்
தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே நல்லுறவு நிலவும்.
கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும். சமுதாயத்தில் புகழ், கௌரவம்,
அந்தஸ்து ஆகியவை உயரும். குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன்
சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் பொருளாதார நிலை
சிறப்படையும். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.
குரு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொதுவாக சமுதாயத்தில்
மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும்.
குரு
மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக
எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரருக்கு
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள்
உண்டாகும்.
ரிஷபம் :
களத்திரத்திற்கு
காரகரான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான குணமும், பிறர் மனதை
கவர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும்
ரிஷபம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப்
பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு அஷ்டம மற்றும் இலாப பாவாதிபதியான குரு
இதுநாள்வரை தங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ருண, ரோக,
சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இந்த காலத்தில் உங்களுக்கு குரு
ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டப்படும்
சூழ்நிலை உண்டாகும். . தேவையற்ற கடன்கள் வாங்கி, அதன் காரணமாக கடன்
கொடுத்தவர்களினால் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும்,
சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். எதிரிகளின் பலம் கூடும். அதனால் உங்கள் மனம்
பாதிப்படையும் குழந்தைகளால் வருமானம் அதிகரிக்கும் மனைவியால் விரயங்கள்
ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப்
பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். செய்யும்
தொழிலில் விரிவாக்கங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். மனைவியின்
செயல்படுகள் சிறந்து, செயல்கள் எல்லாவற்றிலும் கை கொடுப்பார். தந்தை
வகையில் தனவரவு உண்டாகும்.
குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள்
ராசிக்கு விரய பாவத்தை பார்வை இடுவதால் வீட்டில் விலை உயர்ந்த ஆடை
ஆபரணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும்.
மூத்த சகோதரர்களால் பண வரவு உண்டாகும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக
உங்கள் ராசிக்கு தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில்
பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குரும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும்.
மிதுனம்:
கல்விக்கும்
புத்திசாலித்தனத்திற்க்கும் வியாபாரா சிந்தனைகளுக்கும் காரகரான புதனை
அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி
தரும் பலன்களைப் பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு களத்திர மற்றும்
ஜீவன பாவத்துக்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து
புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார். தேவகுரு
இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் சில
கஷ்டங்கள் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக
அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும்.
இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். நீங்கள் எதிர்பார்த்த செல்வம் சேரும்.
முகத்தில் அழகும் பொலிவும் கூடும், புத்திதெளிவும், அறிவுக் கூர்மையும்
ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல
வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஆண்
குழந்தை கிடைக்கலாம். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும்.
சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால்
அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் அதன் மூலம் சமுதாயத்தில் மதிப்பும்
மரியாதைகளும் அதிகரிக்கும். தந்தையின் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள்
உண்டாகும்.
குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப
பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான
இலாபங்கள் கிடைக்கும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு
ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரரின் பொருளாதாரம்
சிறப்படையும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியை
பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும்
அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே
மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்:
நல்ல
மன நிலைக்கும் தாய்க்கும் காரகரான சந்திரனை அதிபதியாகக் கொண்ட
நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகம் ராசி
அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம்.
உங்கள்
இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு தைரிய
ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானமான துலாத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வை பலன்கள்:
குரு
ராசிக்கு நான்கில் வந்த போது தான் தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி
சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண்
சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க
நேரலாம். எனவே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது.
பண இழப்பு உண்டாகலாம், குடும்பத்தில் நிம்மதி குறையும் சந்தோஷம் குறையும்,
குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது
நல்லது. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும்.
தொழில் உத்தியோகத்தில் சிக்கல்களும், வருமானக் குறைவும் ஏற்படும்.
குரு
தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.
இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள்
வெற்றி அடையும். மன கஷ்டங்கள் மன அழுத்தங்கள் மறையும். பயம் விலகி மன பலம்
உண்டாகும். இது வரை இருந்து வந்த. தடைகள் விலகி மண மேடையில் உலாவரும்
பாக்கியம் ஏற்படும்.
குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10
ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக முடங்கிய தொழில்கள் மேன்மை
நிலையை அடையும். தொழில் உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும்.
பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்
கிடைக்கும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12 ஆம்
இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். சுகமான நித்திரைக்கு எவ்விதக்
குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான
சூழ்நிலை உருவாகி வெற்றி கிடைக்கும்.
சிம்மம்:
அப்பாவுக்கும்
ஆத்மாவுக்கும் தொழில் உத்தியோகத்திற்கும் காரகரான சூரியனை அதிபதியாகக்
கொண்ட தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவர்களும் ,தன்னம்பிக்கை
மிக்கவர்களுமான சிம்மம் ராசி அன்பர்களே!
தங்கள் இராசிக்கு குருபெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
தங்கள்
இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள்ஸ்தானாதிபதியுமான குரு தன
பாவத்திலிருந்து தைரிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார் இது நாள் வரை
தனபாவத்தில் இருந்து வந்த குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அள்ளி
வழங்கினார்.
இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத
நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே,
எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே நல்லது உடன் பிறப்புகளால் குடும்ப
ஒற்றுமை குறையும். நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். எச்சரிக்கையாகவே
இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். அரசாங்க
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் உண்டாகும்.
யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே,
எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாக்கு வாதங்கள்
அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தை
பார்வையிடுவதால்,திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன
உறவுகள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய் மாமனின்
பொருளாதார நிலை உயரும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதியஇடமாற்றங்கள்
ஏற்படலாம்.
குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால்
குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்லும் நிலை உண்டாகும் அப்பாவின்
ஆரோக்கியம் சிறப்படையும். கடவுள் அருள் அதிகரிக்கும்.
குரு 9 ஆம்
பார்வையாக உங்கள் ராசிக்கு இலாப பாவத்தைப் பார்ப்பதால் இலாபம்
அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில்
அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மங்களகாரியங்கள்
நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம்ஏற்படும்.
கன்னி:
புத்தி
காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட நற்குணமும் இரக்க குணமும் கொண்ட
கன்னிராசி அன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயரச்சி தரும்பலன்களைப்
பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர
ஸ்தானாதிபதியுமான குரு ஜென்ம ராசியிலிருந்து தன, குடும்ப ஸ்தானமான துலாம்
இராசிக்கு மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் சிறப்பான
காலம் ஆரம்பமாகிவிட்டது. வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் பொருளாதார
முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை
பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் விரயங்கள் ஏற்படும். தனதான்ய விருத்தி
உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும்.
அனைத்து ஐஸ்வரியமும் உண்டாகும். தொழில் உத்தியோகம் மற்றும் வியாபாரம்
ஆகியவற்றில் சீரான முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த
எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும்.
வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி
மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும்
தரும். குருவின் பார்வை பலன்கள்:
குரு 5
ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன்
காரணமாக நோய் நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும் அம்மாவின் உடன்
பிறப்புக்களுக்கு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும்.
தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள்
நீங்கும். பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து,
கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள்
உயரும்.
குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆயுள் பாவத்தை பார்வை
செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும்.
நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் நிரந்தரமாக சரியாகும். மணவிழாக்கள்
மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக
வாய்ப்புகள் தேடி வரும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக
வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள்
ராசிக்கு ஜீவன பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை
கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு
அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக
பணி புரிபவர்களுக்கு, பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும்
கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் அதிகரிக்கும். புதிய
வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
துலாம்:
அசுர
குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை
பேச்சும், வாசனை பிரியரும், ஜாலியான குணமுள்ளவர்களான துலாம் ராசி
அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சிதரும் பலன்களைப் பார்ப்போம்.
துலாம்
ராசிக்கு தைரிய வீரிய, ருண ரோக பாவங்களுக்கு அதிபதியான குரு தங்கள் ஜன்ம
இராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில்
பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு என அலைந்து திரிய நேரிடும். சுபகாரியச்
செலவுகள் ஏற்படும். வேண்டிய அளவுக்கு பொருள் வரவு வந்தாலும் செலவுகளும்
அதிகமாகும். சிறுசிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். பெண்களால்
அவப் பெயர் ஏற்படலாம். செலவுகளினால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண
வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். தேவையற்ற,
ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், படிப்பை முடித்தவர்களுக்கு
நல்ல வேலைவாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய
நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. அடிக்கடி மன
குழப்பங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை
உண்டாகும் தூக்கமின்மையின் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி
ஏற்படும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகப்
பெரியோர்களை சந்தித்து, அவர்களின் அருளாசி பெறுவீர்கள். மாணவர்களின்
கல்வித் திறன் மேம்படும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர பாவத்தை
பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ
வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய்
நொடியின் பாதிப்புகள் குறையும். சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும்.
குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தைப் பார்வை
செய்வதால், தொழில் கூட்டாளிகளிடையே நல்லுறவு சிறப்படையும். கணவன், மனைவி
இடையே அன்னியோன்னிய உறவு ஏற்படும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக
உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் கோவில் திருப்பணிகள், தர்ம
காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை
உயரும். பூர்வீகத் தொழில்கள் மேம்பாடு அடையும். இலாபமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
தைரியம்
வீரம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகம்
இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப்
பார்ப்போம்.
விருச்சிகம் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு
விரய பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக விரயங்கள் ஏற்படும்.
பிறர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. சுலபமான
காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பண வரவு
வந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். .சிலருக்கு,
வீட்டில் மராமத்து பணிகள செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள்
காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாததாகும்.தேவையற்ற கடன்கள் வாங்குவதைத்
தவிர்க்கவும். .சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில்
தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும்
இருக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தொழிலில் நஷ்டங்கள்
ஏற்படும். தொழிலில் தேவையற்ற பகை உண்டாகும். மன உளைச்சல் ஏற்பட்டு, மன
அமைதியும் குறையும். சிலர் பதவி இழக்க நேரும். தொழில் உத்தியோகத்தில்
மாற்றங்கள் ஏற்படலாம். குருவின் பார்வை பலன்கள்:
குரு
5 ஆம் பார்வையாக உங்கள் சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக
நிலம் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீடுகட்டுவீர்கள் புதிய
கல்வி கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார், வீடு, சுகம் போன்ற 4
ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள்
ஏற்படும்.
குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6 ஆம் பாவத்தை
பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும். சத்ரு
ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின்
தாக்கமும், வேகமும் குறையும். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய
சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான
விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும்.
குரு
9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன்
காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும்.
தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். அஆன்மீகப் பயணங்களால் பணவிரயங்கள்
அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள்
வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி
தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள்
நடைபெறும். கடன் உதவிகள் கிடைக்கும்.
தனுசு:
தேவகுருவான
குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், தனவான் என போற்றப்படும்
நாணயமும், நியாயமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு
பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
உங்கள் ஜென்ம இராசிக்கும் ,
சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு இலாப பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார்
அதிகாரப் பதவி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். நவீன வாகனங்கள்
வாங்கும் யோகம் உண்டாகும் பணம் பல வழிகளிலும் சேரும். கையில் பணப்புழக்கம்
தாராளமாகவே இருக்கும். இது வரை தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள்
கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். தம்பதிகளின்
வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒற்றுமையுடன்
பழகுவார்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில்
எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும் அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்
கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்கள் சேரும். வெளிநாட்டுக்கு
செல்லும் யோகம் உண்டாகும். செல்வ நிலையை உயரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி
பெறும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால்
கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள்.
உயர் கல்வியில் மாணவர்களின் அறிவு விருத்தியாகும். . சகோதர வகையில்
முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும்.
தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும்,
குரு தனது 7 ஆம் பார்வையால்
உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.அதன் காரணமாக
குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச்
சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும்.பொன் ஆபரண,
அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக
நடந்தேறும். தாய்வழியில் பண வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சந்தோஷம்
நிலவும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தைப்
பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளிடையே சந்தோஷம் நிலவும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத்
தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபார சம்பந்தமான வெளிநாட்டு
பிராயாணங்கள் ஏற்படும்.
மகரம்:
ஆயுளுக்கும்
ஜீவனத்திற்கும் காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட அனைவருக்கும்
உதவுபவர்களுமான மகரராசிஅன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும்
பலன்களைப் பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான
குரு ஜீவன பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக அனைத்துக்
காரியங்களுக்கும் பிறர் தயவையே நாடவேண்டியிருக்கும். சிலருக்கு இதுவரை
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இது வரை
வகித்துவந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு
பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல்
ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மாசினும் எவரை நம்பியும் கடன் கொடுக்க
வேண்டாம். உங்கள்விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. ஊரைவிட்டுப் போகவேண்டிய
சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல்சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும்
திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும்
எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள்
அதிகமாகி உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது. வாழ்க்கையில் வெறுப்பு
உண்டாகும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை
ஆதலால் இல்லத்தில் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு
ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குரு 7 ஆம்
பார்வையாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக
புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு, நிலம்
ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் கல்வியில்
மேன்மை நிலை அடைவார்கள்.
குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள்
ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட
நாட்களாக இருந்துவந்த நோய்கள் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள்
நட்பு பாராட்டுவார்கள்.
கும்பம்:
ஆயுள்
மற்றும் தொழிலுக்கு காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை
செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்தில்
நாட்டமுடையவருமான கும்பராசி அன்பர்களே! உங்கள்இராசிக்கு குரு பெயர்ச்சி
தரும் பலன்களைப் பார்ப்போம்.
தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப
பாவத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து
உங்கள் இராசியை 5ம் பார்வையாக பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத்
திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர
பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள்
அனைத்தும் உங்கள்சமயோசித புத்தியால் சரியாகிவிடும். நல்ல யோகமான
காலமாதலால்அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுவவீர்கள், சொத்துக்கள்
சேர்க்கை அதிகரிக்கும் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இது வரை இருந்து
வந்த சிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே
நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் எதிர்
பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக்
கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் அப்பாவின்
ஆதரவு கிடைக்கும். அந்தஸ்து உயரும். வசதி வாய்ப்புகள்
அதிகரிக்கும்.சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு
உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள்
அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர். புதிய
தொழில்களில் முதலீடுகள் செய்து தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும்.
அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் பெயரும்
புகழும் அதிகரிக்கும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள்
அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி
ஆரோக்கியம் மேம்படும். தொழில் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
குரு
7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையின்றி அலைந்தவர்களுக்கு
நல்ல வேலை கிடைக்கும். பணவசதி அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும்.
மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம்
வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த செய்திகள் மகிழ்ச்சி
அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
குரு தனது 9 ஆம்
பார்வையால் உங்கள் ராசிக்கு புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக
குடும்பத்துடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக
சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு
உண்டாகும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள
காரியங்கள் நிறைவேறும்.
மீனம்:
தேவகுருவான
குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான்,கெட்டிக்காரர், இரக்கமுள்ள, மீனம்
ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப்
பார்ப்போம்.
உங்கள் ஜென்ம இராசிக்கும் ஜீவன பாவத்திற்கும் அதிபதியான
குரு உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம்
பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக
நடந்திருக்கும்.பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்.
தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன்
வாழ்க்கைசந்தோஷமாகக் கழிந்திருக்கும். குருவின் தற்போதைய இட மாற்றத்தால்
பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு
இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள்
கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவப்பெயர் ஏற்படும்.
பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். கோர்ட், வழக்கு போன்ற
தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல்
ஆரோக்கியம் பாதிக்கப்படும்.. காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது.
உடல் உழைப்பு அதிகமாகும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. தேவையற்ற செலவுகள்
ஏற்படும். பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை மாற்றி
அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். குருவின் பார்வை பலன்கள்:
குரு
தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தைப்
பார்ப்பதால்,செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும்
சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல்
போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.
வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.
குரு தனது 7 ஆம் பார்வையால்
உங்கள் ராசிக்கு தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில்
திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக
அமையும். தன வரவு அதிகரிக்கும். பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே
இருக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு
உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குரு
தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால்
ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள்
அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள்
உண்டாகும் வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.