தமிழகத்தில் ISO அங்கீகாரம் பெற்ற ஒரே அரசுப்பள்ளி

தமிழகத்தில் ஐஎஸ்ஓ அங்கீகாரம் பெற்ற ஒரே அரசு பள்ளி நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் அரசு பள்ளியாகும். சுனாமியால் 80 குழந்தைகளை இழந்த பிறகு சோகம் மற்றும் சோதனையில்  இருந்து மீண்டெழுந்துள்ளது. 

கடந்த 2004 டிசம்பர் 24ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் நாகை வட்டம் கீச்சாம்குப்பம் மீனவ கிராமத்தில் 600 ேபர் பலியாயினர். அப்போது கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 80 குழந்தைகள் இறந்தனர். நாகை மாவட்ட சரித்திரத்தில் பெரும் கரும்புள்ளியாக குழந்தைகளின் மரணம் பதிவானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சுனாமியால் சிதலமடைந்த பள்ளி தற்போது பிரம்மாண்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

சுனாமி பேரழிவில் சிக்கிய பின் இப்பள்ளி சால்டு ரோட்டில் உள்ள சேவா பாரதி சுனாமி குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது. 2008ல் பி.டி.ஏ. என்ற தொண்டு நிறுவனம் கீச்சாம்குப்பத்திலேயே ₹65 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தது. ஆனால் ஆறாத வடுவாக மனதில் படிந்துபோன சுனாமி நினைவலைகளால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சினா். 

190 மாணவர்களின் பெற்றோர் மட்டுமே அச்சத்தை தொலைத்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். ஆனாலும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ந்து 2013ம் ஆண்டு 92 ஆக சுருங்கியது. இதனால் 11 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு 4 ஆசிரியர் பணியிடங்களை அரசு ரத்து செய்தது. 

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் தலைமை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியருமான பாலு தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி திட்டமிட்டு ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்தினர். அதன்படி ஒரு வகுப்பறையில் எல்.சி.டி. ப்ரொஜக்டர், தொடு திரை, லேப்டாப், ஸ்பீக்கர், இணையதள இணைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்காக வந்த  பெற்றோர்களிடம்  ஸ்மார்ட் கிளாஸ் வசதி பற்றி  கூறி அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தனர்.  

இதனால் மாணவர் சேர்க்கை பல்கி பெருகிறது. தற்போது முன்பருவ மழலையர் முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 448 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து தற்போது ஆசிரியர்கள் எண்ணிக்கையும்  15 ஆனது.  இன்றைக்கு பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பார்த்த  ஐ.எஸ்.ஓ. (9001:2015) நிறுவனம், கீச்சாம்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. சான்று வழங்கி கவுரவித்தது. 

இதன் மூலம் தமிழகத்தில் ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்றுள்ள ஒரே அரசு பள்ளி என்ற கவுரவத்ைத ெபற்றது.உடனடியாக பெற்றோர்கள் ஒன்று திரண்டு  2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசை அளிப்பதைப்போன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து  ஒப்படைத்தனர். பள்ளி மாடியில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

30 லட்சம் மதிப்பில் இப்பள்ளியில், அறிவியல் ஆய்வகம், கணிணி ஆய்வகம், டிஜிட்டல் நூலகம், அனைத்து வகுப்புகளிலும் இணையத்தள வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 220 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் நேரில் வந்து பள்ளியை பார்வையிட்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்க கல்வி அலுவலகம் மூலம் காமராஜர் விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இப்பள்ளி தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விருது வழங்கப்பட உள்ளது. 

சுனாமி எச்சரிக்கை அலாரம்
கீச்சாம்குப்பம் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் என்பதால், இப்பள்ளியில் சுனாமி எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மணி ஒலித்தால் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியின் மேல் தரைத் தளத்திற்கு சென்று சேர்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.