தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்


அஞ்சல்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

கேரளா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் தற்காலிக ஊழியர்களுக்கு 6, 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் தற்காலிக இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
அதனால் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்(என்எப்பிஈ) சார்பில் ஜூலை 13ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் தொழிலாளர் ஆணையர் தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள் அண்ணாசாலை அஞ்சலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.