அரசு பள்ளிகள் தரம் உயர்வு: கோட்டை விட்டது மதுரை : முதல்வர் தொகுதி முதலிடம்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதில், மதுரையில் ஒரு பள்ளிக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களை கவலையடைய செய்துள்ளது. அதேநேரம் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஏழு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 150 நடுநிலை, உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில், 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும். இதில், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக, 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படாத நிலையில், இக்கல்வியாண்டு, அறிவிப்பு மட்டும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பெயர் பட்டியல் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கு காரணம், 'தகுதி இல்லாத பள்ளிகளையும் தரம் உயர்த்த ஆளும் கட்சியினர் கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது தான்,' என தகவல் வெளியாகியது. ஆனாலும் கல்வி செயலாளர் உதயசந்திரன், தகுதியான பள்ளிகளை மட்டுமே தரம் உயர்த்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.தற்போது 100 மேல்நிலை பள்ளிகள் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பல பள்ளி
களுக்கு வாய்ப்பு இருந்தும், கொட்டாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இத்துடன் பரிந்துரைக்கப் பட்ட களிமங்கலம், அவனியாபுரம் அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் சேலம் -7, திருவள்ளூர் - 7, வேலுார் - 6, விழுப்புரம் -6, காஞ்சிபுரம் -5, விருதுநகர் -6 என பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளிகளுக்கு இடையே, மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் இருக்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. செயலாளர்உதயச்சந்திரனும் இதை
கண்டிப்பாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.ஆனால், அரசியல் குறுக்கீடால் பள்ளிகளை தேர்வு செய்ய கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியின்றி தகுதியில்லாத பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று. குறிப்பாக ஊமச்சிகுளம், வண்டியூர், ஆனையூர் பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பகுதிகள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் தொகுதிக்குள் வருவதால் இவை பரிசீலிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால், 30 ஆசிரியர் பணியிடங்கள் மதுரைக்கு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை மதுரை கோட்டை விட்டது, என்றனர்.