மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து, எவ்வித உள் ஒதுக்கீடும் இன்றி ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 17ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு மேலும் தாமதமாகும் என்று அஞ்சப்படுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதனால், மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெறும் நூறு இடங்களை மட்டுமே சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் பிடிக்க முடியும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.