உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது: கடல் மட்டம் உயரும் ஆபத்து!

அண்டார்டிகா மேற்கு பகுதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான பகுதி உடைந்து தனியாக பிரிந்து சென்றது. இதுவரை பிரிந்து சென்ற மிகப்பெரிய பனிப்பாறைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதன் சுற்றளவு மொத்தம் 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். எடை சுமார் ட்ரில்லியன் டன் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியான லார்சின் சி என்ற பனி அடுக்கில் இருந்து 12 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது.
இதுகுறித்து இயற்கை அறிவியலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:
இந்த பனிப்பாறையை ஜரோப்பிய செயற்கைக்கோள்களின் மூலமாக கடந்த சில தினங்களாக தீவிரமாக கண்காணித்து வந்தோம். இதனிடையே 10-ந் தேதியில் இருந்து 12-ந் தேதிக்குள்ளாக இந்த பனிப்பாறை உடைந்து தனியாக பிரிந்து சென்றது.
இந்த உடைந்த பகுதியானது சமீபகாலங்களில் ஏற்பட்ட மிக்பெரிய பனிப்பாறை வெடிப்பாகும். இந்த உடைந்த பகுதிக்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளோம். தொடர்ந்து இந்த பனிப்பாறையை கண்காணித்து வருகிறோம்.
இது முழுவதுமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது சிதறியும் செல்லக்கூடும். அவ்வாறு சிதறினால், சில கடல் பகுதியேலே தங்க வாய்ப்புள்ளது. அல்லது, வடக்கு திசையில் வெப்பப் பிரதேசத்தை நோக்கி பயணிக்கலாம். இதனால் அப்பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்றனர்.