அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு : திணறும் கல்வி அதிகாரிகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில், அரசியல் தலையீடு அதிகரிப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்,' என சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும், 150 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலையாகவும், 100 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேல்நிலையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர்நிலையில் 750 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.இதில் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக 100 பேருக்கும், 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.தரம் உயர்த்துதல் தொடர்பாக, இக்கல்வியாண்டும் அறிவிப்பும் வெளியாகிய நிலையில், பள்ளிகள் பட்டியலை வெளியிடுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது. 

'ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பெயர்களை அறிவித்து அப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என ஆசிரியர்கள் எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கு காரணம், தகுதி இல்லாத பள்ளிகளை தரம் உயர்த்த சொல்லி, ஆளும் கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்வதால், கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர்.

இது குறித்து, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையே 3 முதல் 5 கிலோ மீட்டர் துாரம், ஒரு மேல்நிலை பள்ளிக்கு அருகே குறைந்தபட்சம் 2 அல்லது 3 உயர்நிலை பள்ளிகள் (ஊட்டுப் பள்ளிகள்) இருக்க வேண்டும், மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் தரம் உயர்த்த தகுதிகளாக கணக்கிடப்படுகின்றன. கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனும், இதை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.ஆனால், அமைச்சர்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் என குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்ய, அரசியல் கட்சி யினரின் வாய்மொழி உத்தரவால் கல்வி அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். வேறு வழியின்றி, தகுதியில்லாத பள்ளிகள் பல மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.எனவே இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பள்ளிகள், தரம் உயர்த்த தகுதி வாய்ந்தவையா என்பதை மீண்டும் ஒருமுறை கல்வி செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதி முடிவு மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

'டிரான்ஸ்பர்' பேரம் ஜரூர்... : தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் உருவாகும், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளிகளில் சுமார் 450 பட்டதாரி பணியிடங்கள் வரையும் 'டிரான்ஸ்பர்' மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே தொலைதுாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 'டிரான்ஸ்பர்' பெற்று, சொந்த ஊர் செல்ல முயற்சிக்கின்றனர்.


இதற்காக ஆளும் கட்சியினர் சார்பில், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, மறைமுக பேரம் பேசப்பட்டு வருகிறது. எனவே, சிறப்பு கலந்தாய்வு நடத்தி, இப்பணியிடங்களையும் வெளிப்படையாக நிரப்ப, கல்வி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.