'தேர்வு முறை, கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் தேவை!'

சென்னை:நினைவாற்றலை மட்டுமே ஆய்வு செய்யும், தற்போதைய தேர்வு மற்றும் கற்பித்தல் முறையை, மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறினார்.


சென்னை பல்கலை யில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், அவர் பேசியதாவது:
நாட்டில் உயர் கல்வி என்பது, குறுக்கு சாலையாக உள்ளது. எதை நாம் அடைந்திருக்கிறோமோ, அந்த இலக்கில் முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மாணவர்கள், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை சராசரியாகவே உள்ளது.

தரமான கல்வி

தற்போது, சர்வதேச அளவில், அறிவு போட்டி நடக்கிறது. வேளாண், தொழில், அறிவியல் என, ஒவ்வொரு துறையிலும், திறமையான பயிற்சி பெற்றவர்கள் தேவை. அதற்கு, மிகவும் தரமான உயர் கல்வி வேண்டும். அதில், நாம் குறைவாக இல்லை. ஆனால், உயர் தரமான மற்றும் முழு ஈடுபாட்டுடன் கூடிய உயர் கல்வியாக, அது வலு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பயன்பாடு, சமவிகிதம் மற்றும் தரம் என, மூன்றையும் பின்பற்ற வேண்டும். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், தரமான கல்வியை பெறுவோர் எண்ணிக்கை, நம் நாட்டில் குறைவு. உரிமை மறுக்கப்படுவோருக்கு, உயர் கல்வி முழுமையாக கிடைக்கவில்லை. வேலைவாய்ப்புடன் கூடிய தரமான கல்வியும் தேவைப்படுகிறது.

இதற்கு, இந்திய கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை. பாடத்திட்டத்தை, உலகத் தரத்தில் நவீனப்படுத்த வேண்டும். பொருளியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் போன்றவற்றில், இன்னும் முன்னேற்றம் வேண்டும். பாடத்திட்டம் புதுப்பிப்பதை, வெறும் முகப்பூச்சாக செய்யக் கூடாது.

தேர்வு முறையிலும், பெரிய மாற்றம் தேவை. கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில், மாணவர்களை உருவாக்கும் கல்வி முறை, நம் நாட்டில் உள்ளது. இதற்கு, நம் தேர்வு முறையை மாற்றாததும் காரணம்.

தனித்திறன்

வெறும் நினைவாற்றலை மட்டும் சோதிக்கும் தேர்வாக இல்லாமல், தனித்திறன்களை ஆய்வு செய்வதாக, தேர்வு முறை மாற வேண்டும். நமக்கு ஒருங்கிணைந்த தேர்வு முறை வேண்டும். மாணவர்களின் திறனை வேறுபடுத்தி, ஆய்வு செய்யும் தேர்வு வேண்டும்.

அதேபோல், முழு ஈடுபாட்டுடன் கூடிய கற்பித்தல் முறையும் தேவை. எனவே, ஆசிரியர்கள், தற்கால தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். மாணவர்களிடமும் மாற்றம் வேண்டும். தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, தேர்வு முறை மற்றும் கற்பித்தலை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு, அவர்கள் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.