ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல், ஆதார் எண் இருந்தால் தான், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.



அதன்பின், ஆதார் அட்டை வாங்காதிருந்த, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் மையங்களை முற்றுகையிட துவங்கினர். இதனால், சில வாரங்களாக ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் அலைமோதி, சர்வர் கோளாறாகி, பணிகள் முடங்குகின்றன.

இதனிடையே, ஆதார் கார்டு வைத்திருந்தாலும், அதில் உள்ள விபரங்கள், பான் கார்டில் உள்ள விபரங்களுடன் ஒத்து போகாததால், ஆயிரக்கணக்கானோர், அவை இரண்டையும், இணைக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக, மீண்டும் பான் அட்டைக்கோ, ஆதார் அட்டைக்கோ, திருத்தம் கோரி மனு கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நடைமுறைகள் முடிய, 10 நாட்களுக்கு மேல் ஆவதால், கடைசி தேதியான, ஜூலை, 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதனால், ஜூலை, 31 கெடுவை, மேலும், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அவர்கள், எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழக வருமான வரித் துறையினர் கூறுகையில், 'காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 2016ல், ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிப்பு குறித்து, உத்தரவு ஏதும் வரவில்லை' என்றனர்.