பெங்களூரு:
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத
கல்லுாரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ள அரசு, ஒரு வாரத்துக்குள்
பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது போன்ற கல்லுாரிகளின் அங்கீகாரத்தை
ரத்து செய்வதாகவும் எச்சரித்துள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் நடந்த பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில் மாநிலத்தின், 127 தனியார் பள்ளிகள், மூன்று அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 132 பி.யு., கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இது போன்ற கல்லுாரிகளுக்கு, பி.யு., கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி, இன்னும் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. தவறும் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பி.யு., கல்வித்துறை இயக்குனர் சி.ஷிகா கூறியதாவது:
'பூஜ்யம்' எடுத்துள்ள கல்லுாரிகளின் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளோம். இக்கல்லுாரிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். 25ம் தேதிக்கு பின், கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.