தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது. இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

அப்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை நினைத்து அச்சப்பட தேவையில்லை. பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை (திங்கட் கிழமை) அரசு அறிவிக்க உள்ளது.

இன்னும் ஒரு வார காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

அதேபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் பொது தேர்விற்காக 450 மையங்களில் சனிக்கிழமை தோறும் முழு பயிற்சி அளிக்க விரைவில் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி வினா-விடையும் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி காலை 8.30 மணியளவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.ஜி.ஆரின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.