தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி

பூம்புகாரில், கிராம மக்களின் முயற்சியால், அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம், பூம்புகாரில், 1949ல், ஆரம்பிக்கப்பட்ட துவக்க பள்ளி, 2004ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அருகில் உள்ள ஊர்களில், தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியது. கடந்தாண்டு, மூன்று மாணவர்கள் மட்டுமே, புதிதாக சேர்ந்தனர்.


இதனால், நடுநிலை பள்ளி என்ற அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவானது. தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில், பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் சார்பில், கல்விக்குழு உருவாக்கப்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தனியார் பள்ளிகளை போல, யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, சுத்தமான கழிப்பறை, சுற்றுச்சுவர், குழந்தைகளை வீடுகளில் இருந்து அழைத்து வர வாகன வசதி என, கிராம பொது நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், பள்ளி நவீனமாக மாற்றி அமைக்கப்பட்டது.அது மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித் தொகை, கிராமம் சார்பில் வழங்கப்படுகிறது. 


அரசை மட்டும்நம்பியிராமல், பொதுமக்கள் இணைந்து, மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இந்தாண்டு, 57 பேராக அதிகரித்து, மொத்த மாணவர்களின் 
எண்ணிக்கை, 145 ஆகியுள்ளது.