அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு பிரபல நிறுவனத்திடம் தர முடிவு

அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கணினி வழி கல்வியை ஊக்குவிக்க, மத்திய அரசு பல உதவிகளை செய்து வருகிறது.
இதில், 'நிதியுதவி திட்டம் - 2010'ன் கீழ், ௫,௨௬௫ பள்ளிகளில், கணினி வசதியுள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.

முதற்கட்டமாக, ௯௨௦ பள்ளிகளில், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, 'டெண்டர்' முறையில் வழங்காததால், பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்ததால், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டது. பின், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டம் கிடப்புக்கு போனது.

ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசு ஆறு ஆண்டாக கடிதம் எழுதி வருகிறது. எனவே, இந்த ஆண்டு, 'ஸ்மார்ட்' திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த முறை, விதிமீறல்களுக்கு இடமின்றி, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, 'டெண்டர்' அறிவித்து, வெளிப்படையான விதிகள் மூலம், கணினி வசதி செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 'சாம்சங்' நிறுவனத்துடன் இணைந்து, 'ஸ்மார்ட்' திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதுபோல், பிரபலமான, தரமான நிறுவனத்தை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுத்துள்ளது. விரைவில், இதற்கான, 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.