ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்?

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 95% பேர் தேர்ச்சி பெறத் தவறிய அதிர்ச்சித்
தகவல் தெரிய வந்துள்ளது.

அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய 7.53 லட்சம் பேரில் வெறும் 34,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாளை 2.41 லட்சம் பேரும், இரண்டாம் தாளை 5.12 லட்சம் பேரும் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 1ம் தேதி வெளியானது. இதில் சுமார் 4.93 லட்சம் பட்டதாரிகள் 150க்கு 90 என்ற தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர்.

இதில் ஏராளமானோர் அறிவியல் மற்றும் கணிதத்தில் தான் தோல்வி அடைந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறுகையில், இந்த முறை வினாத்தாளில் பல மனோதத்துவத் துறை சார்ந்த பல கேள்விகள் இடம்பெற்றிருந்தன என்று கூறினார்.


பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், தனியார் ஆசிரியர் பயிற்சி மையங்களில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டுதான் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், குறைந்த ஊதியத்துடன், ஒரு நாளைக்கு அதிக வகுப்புகளை எடுக்க வைக்கின்றனர். இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறைவதே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.