தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடக்கும் பயிற்சி - வெளியில் செல்லும் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்

   மதுரை மாவட்டத்தில் இன்று முதல் (ஜூலை 10) துவங்கும் எஸ்.எஸ்..,- ஆர்.எம்.எஸ்.., சிறப்பு பயிற்சியை கல்வித்தறை செயலாளர் உதயசந்திரன் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதனால், பயிற்சிக்கு 'டிமிக்கி'   கொடுக்காமல் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் சென்றுவிடுங்கள் என சங்கங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக எஸ்.எஸ்.., ஆர்.எம்.எஸ்.., உட்பட பயிற்சி வகுப்புகள் என்றாலே தாமதமாக செல்லும் ஒரு ஆசிரியர் கூட்டமே உள்ளது. சங்கம் பின்னணியில் உள்ள ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பயிற்சியில் பங்கேற்காமல் 'டிமிக்கி' கொடுத்து தப்பித்து விடுவர்.இந்நிலையில் இன்றுமுதல் ஐந்து நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில், 6-10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக பங்கேற்கின்றனர். இப்பயிற்சியின் செயல்பாடுகளை செயலாளர் உதயச்சந்திரன் நேரடியாக கண்காணித்து, முதன்முறையாக காணொலி காட்சி மூலம் பயிற்சியிலுள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், ஜூலை 10- 14 மற்றும் 24 - 28 ம்தேதி என இரண்டு கட்டங்களாக வட்டார வளமையங்களிலும் பயிற்சி நடக்கிறது.பயிற்சியை செயலாளர் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வலியுறுத்தி சங்கங்கள் சார்பில் 'வாட்ஸ்ஆப்' மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதில், 'ஆசிரியர்கள் முன்கூட்டியே பயிற்சி வகுப்பு நடக்கும் அறைக்கு சென்று விடுங்கள். பஸ் வரவில்லை, நிற்கவில்லை, திடீரென உடம்பு சரியில்லாமல் போச்சு போன்ற காரணத்தை தவிர்த்துவிடுங்கள். உண்மையிலேயே உடல் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற்று விடுங்கள்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கல்வி அதிகாரி கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஏனோ தானோ என்று தான் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என செயலாளர் எச்சரித்துள்ளார். 'வீடியோ கான்பரன்சிங்', 'ஸ்கைப்' மூலம் அவரே குறுக்கிட்டு பயிற்சி குறித்தும் கேட்கவும் வாய்ப்புள்ளது. பயிற்சி மையங்களில் இதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.