அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


அருப்புக்கோட்டையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 243 மெட்ரிக் மற்றும் தொடக்க, நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஆணைகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழக அரசு, ஏழை மாணவர்கள் சிறப்பான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவதற்காக கல்வித் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் பெறும் வகையில் 765 பாடங்களை கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1112 இடங்களில் கல்வி வழிகாட்டி நெறிமுறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் கூட்டுறவு துறையில் வழங்கப்படும் மின்னணு அட்டையை போல், மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, பிளஸ்1 பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு என மூன்று விதமான வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.