ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு

ஜி.எஸ்.டி-யால் வங்கி வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு பாதிப்படைந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - ஜி.எஸ்.டி என்ற பெயரில் வாடிக்கையாளர்களை நசுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 22-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளை ஒன்றொடொன்று இணைக்கக் கூடாது, பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், வசதி இருந்தும் திருப்பிக் கட்டாத கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடக் கூடாது, வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் சேவைக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.