பி.எட். படிப்புகளில் சேரும் பொறியியல் (பி.இ.) மாணவர்களுக்கு இன்னமும் ஆசிரியர் தகுதியே வழங்கப்படாததால் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) தங்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இந்த மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்களும் 2015 -16 கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இயற்பியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளின்கீழ், பி.எட். படிப்புகளில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தப் புதிய திட்டம்
தொடங்கிய 2015 -16 கல்வியாண்டில் 60 பி.. மாணவர்கள் பி.எட். படிப்புகளில் சேர்ந்தனர். இவர்கள், இரண்டு ஆண்டு பி.எட். படிப்பை முடித்து இந்த ஆண்டு வெளிவருகின்றனர். இந்த நிலையில், பி.எட். முடிக்கும் பி.. மாணவர்கள், பள்ளிக் கல்வியில் எந்தப் பாடத்துக்கு இணையானவர்கள் என்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கான பட்டியலிலேயே இவர்கள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இவர்களுக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதுடன், தனியார் பள்ளிகளும் இவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்த நிலையில், நிகழாண்டைப் பொருத்தவரை , சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2017 -18 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 81 பி.. மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 45 பேர் மட்டுமே பி.எட். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோதே, பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமான பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவ்வாறு வரையறுக்கப்படவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அண்மையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எனக்கு புகார் வந்தது. பி.எட். முடிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதியை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைதான் முடிவெடுக்க வேண்டும். எனவே, இந்தப் புகாரை உடனடியாக அந்தத் துறைக்கு மாற்றி அனுப்பிவிட்டேன்' என்றார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் கூறும்போது, ' இந்தப் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.