தேர்வு வழிகாட்டல் இல்லை : +1 மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான வழிகாட்டல் விதிகள் வெளியிடப்படாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்ணுக்கு பதில், 100 மதிப்பெண்ணுக்கே கேள்விகள் இடம் பெறும்.அதில், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில், 'தியரி' என்ற, கருத்தியல் தேர்வுக்கு, 70; அகமதிப்பீடு, 10; செய்முறை தேர்வுக்கு, 20 மதிப்பெண் தரப்படும். இதில், தேர்ச்சிக்கு, 35 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், தேர்வு எப்படி நடத்தப்படும்; வினாத்தாள் முறை என்ன; எந்தெந்த பாடங்களில், எந்த வகை கேள்விகள் இடம் பெறும்; புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள் இடம் பெறுமா என்பது போன்ற வழிகாட்டுதல், இன்னும் வெளியிடப்படவில்லை.
அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வில், 30 மதிப்பெண் எடுத்து, 'தியரி'யில், ஐந்து மதிப்பெண் எடுத்தால் போதுமா; குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற வேண்டுமா என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.அதேபோல, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பிளஸ் 1 பாடப் புத்தகத்தில், 200 மதிப்பெண்களுக்கு, 'ப்ளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதும், குழப்பத்தை 
ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த, தெளிவான வழிகாட்டல் விதிகளை அரசு வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.