NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை.நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.

இந்த மனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது