NEET Exam Result - எப்போது?

NEET தேர்வு முடிவு, வரும், 26க்குள் வெளியாகிறது. ஆனால், மத்திய அரசின் இணையதளத்தில், நேற்று தவறான தகவல் பரவியதால், மாணவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.


எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமாகி உள்ளது. மே, 7ல் நடந்த இந்த தேர்வை, 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகின. அதனால், 'நீட்' தேர்வு முடிவுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்ச நீதிமன்றம், ஐந்து நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. தேர்வு முடிவுகள், நேற்று பிற்பகலில் வெளியாவதாக, இணையதளங்களில் தகவல்கள் பரவின. அதிலும், மத்திய அரசின் இணையதளத்திலும், அந்த தகவல் இடம் பெற்றதால், அதை பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், http://cbseneet.nic.in என்ற இணைய தளத்தில், எந்த தகவலும் இடம் பெறவில்லை. இதற்கிடையில், 'நீட்' தேர்வு முடிவு, வரும், 26க்குள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.