புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு

புதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து உள்ளது.
மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் கல்வித்தரத்தை முன்னேற்றும் நோக்கில் புதிய கல்வி கொள்கையை வகுக்க முடிவு செய்தது. இதற்காக முன்னாள் மந்திரிசபை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது.


இந்த குழுவினர் பல்துறை வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களிடம் விவாதித்து புதிய கல்வி கொள்கை தொடர்பாக பரிந்துரை அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கினர். இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையை வகுக்க 9 பேர் கொண்ட புதிய குழுவை மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அமைத்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான இந்த குழுவில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இதில் கேரளாவின் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்கள் 100 சதவீத கல்வியறிவை எட்டுவதற்கு மூல காரணமாக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ், வேளாண் அறிவியல் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் பெற்றவரும், மத்திய பிரதேசம் பாபா சாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழக துணை வேந்தருமான ராம் சங்கர் குரீல் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
மேலும் கர்நாடக மாநில கண்டுபிடிப்பு சபையின் முன்னாள் செயலாளர் எம்.கே.ஸ்ரீதர், மொழித்தொடர்பு நிபுணர் டி.வி.கட்டிமணி, கவுகாத்தி பல்கலைக்கழகத்தின் பெர்சிய மொழி பேராசிரியர் மசார் ஆசிப், உத்தரபிரதேச கல்வித்துறை முன்னாள் இயக்குனர் கிருஷ்ணன் மோகன் திரிபாதி ஆகியோரும் இந்த குழுவில் இடம்பிடித்து உள்ளனர்.
இவர்களைத்தவிர பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கணித வல்லுனர் மஞ்சுல் பார்கவா மற்றும் மும்பை எஸ்.என்.டி.டி. பல்கலைக்கழக துணை வேந்தர் வசுதா காமத் ஆகியோரும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் பிரிவுகளை சேர்ந்த இந்த வல்லுனர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றனர். இதன் மூலம் பல்வேறு மட்டங்களில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து, இந்த முக்கியமான கொள்கை ஆவணத்தை வகுக்க உதவும்’ என்று தெரிவித்தார்.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், வெவ்வேறு வயதை கொண்டிருக்கும் இந்த வல்லுனர்களின் அனுபவம், திறமை மற்றும் உலகளாவிய வெளிப்பாடு போன்றவை சிறப்பான கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான இந்த குழுவினர் புதிய கல்வி கொள்கையை முறைப்படுத்தி மறுவடிவமைப்பு செய்யும் என தெரிகிறது. அதே நேரம் இது தொடர்பாக டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவினர் ஏற்கனவே அளித்த பரிந்துரைகளும் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.