நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சிபிஎஸ்இ தகவல்

புது தில்லி: நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என சிபிஎஸ்இ தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதை அடுத்து, இன்று நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ மாணவ சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 8 ஆம் தேதி வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8 ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.
சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று செவ்வாய்கிழமை (ஜூன் 20) நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.