அரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா? தமிழகத்தில் நவோதயா பள்ளி திறப்பதை தடுப்பது ஏன்?

அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் இருெமாழிக்கொள்கையா? தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்குவதை தடுப்பது ஏன்? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயக்குமார் தாமஸ். குமரி மகா சபா செயலாளரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவக்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, ‘தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கடைபிடிப்பது தொடர்பான சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இருமொழிக்கொள்கை என்பது அரசுப்பள்ளிகளில் மட்டும்தானா? தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாதா? நவோதயா பள்ளிகளால் கிராமப்புறத்தினருக்கு கல்வி வாய்ப்பு கிடைக்குமே. இதை ஏன் தடுக்கிறீர்கள்’  என்றார். அப்போது அரசுத்தரப்பில், ‘இது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது. நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக உள்ளது. எனவே, அரசுத் தரப்பில் விரிவாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார். மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன், ‘நவோதயா பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் மாநில மொழி கட்டாய பாடமாக உள்ளது. கேரளாவில் அனைத்து கல்வி பாடத்திட்டத்திலும் மலையாளத்தை கட்டாயமாக்கி உள்ளனர். அதை இங்கும் பின்பற்றலாம்’ என்றார்.

இதையடுத்து அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, மனு மீதான விசாரணையை ஜூலை 3க்கு தள்ளி வைத்தனர்.