ஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்டணம் இல்லா தொலை பேசி எண்கள் அறிவிப்பு

''நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சனிக்கிழமை முதல் அமலாகிறது. இந்த வரி குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வரி விதிப்பு வட்டத்திலும், குறைந்த பட்சம் 2 கருத்தரங்குகள் என 650 கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும் வணிகர்கள் சந்தேகங்களை போக்க கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஒவ்வொரு வணிக வரி வட்டத்திலும் உதவி மையம் மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில், ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள சந்தேகங்களை வணிகர்கள் நிவர்த்தி செய்யலாம். மேலும், வணிகர்களுக்கு அவ்வபோது எழும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஜிஎஸ்டிஎன்-ல் நேரடியாக இணைக்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி 01204888999 மற்றும் வணிகவரித்துறையின் தொலைபேசி உதவி எண்18001036751 ல் தொடர்பு கொள்ளலாம்.
வணிக வரித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டிஎன் இணையதள மென்பொருள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை தொடரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது சுமூகமான முறையில் புதிய வரி முறைக்கு மாற ஒத்துழைப்பு அளிக்கும்படியும் வணிகர்களுக்கு உதவுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.