கல்வித்துறை செயலர் மதிப்புமிகு.த.உதயச்சந்திரன் அவர்களைப்பற்றிய பதிவு!!



உயர்திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப - பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள்....
எங்கள் ஊர்காரர் என்பதில் பெருமையே....
கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு. உதயச்சந்திரன் அவர்களின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது....
உயர்திரு உதயச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரம் அருகே இருக்கும் இன்று நாமக்கல் நகரோடு இணைந்த சின்னமுதலைப்பட்டி என்ற சிறிய ஊரில் பிறந்தவர்.. நடுத்தரக் குடும்பம். நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தவர், அவர் படித்த சமயத்தில் அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘பஞ்சாப் மாநில முதல்வர் யார்?’ என்கிற ரீதியில் பொது அறிவு கேள்விகளைக் கேட்டுத்தான் பாடங்களை அடுத்து ஆரம்பிப்பாராம். அந்த ஆசிரியருக்கு பதில் சொல்வதற்காகவே தினமும் நாளிதழ்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக நினைவில் வைத்துச் சொல்லியிருந்தார்.
அதுதான் உதயச்சந்திரனுக்கு பொது அறிவு மீது ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. நேர்காணலைப் படித்த அன்றிலிருந்து
இன்று வரையிலும் உதயச்சந்திரனைவிடவும் அந்த ஆசிரியர் மனதுக்குள்ளேயே நிற்கிறார்.
ஆசிரியருக்கு ‘இவன் கலெக்டர் ஆவான்’ என்று தெரிந்திருக்காமல் இருக்கலாம். பாடம் நடத்துவது மட்டும்தான் அவரது கடமை. ‘முதல்வர் யார்?’ என்று கேட்பது கடமையைத் தாண்டி அவர் கொளுத்திய ஒரு திரி. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்தை அவர் இதற்காக ஒதுக்கியிருக்கக் கூடும். அந்த ஒரேயொரு நிமிடம் சமூகத்திற்காக, தனது மாணவர்களுக்காக சிந்தித்திருக்கிறார் அல்லவா? அது இன்றைக்குத் தமிழகத்தின் முக்கியமான ஆளுமையை உருவாக்கியிருக்கிறது. ஆசிரியர்களுடன் பேசுகிற வாய்ப்பு கிடைக்கும் போது இந்த உதாரணத்தை சுட்டிக்காட்டுவதுண்டு. தினசரி ஐந்து நிமிடம் ஆசிரியர்கள் தமது கடமையைத் தாண்டிச் சிந்தித்தால் போதும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கிவிடக் கூடும். மாதாவுக்கும் பிதாவுக்கும் பிறகு குருதான் என்று சொன்னதில் அர்த்தமில்லாமல் இல்லை.
உதயச்சந்திரன் ஈரோடு மாவட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர். அப்பொழுதிருந்தே அவரது கனவு ஐ.ஏ.எஸ். நம் ஊரில்தான் வித்தியாசம் பார்க்காமல் சகலரையும் கலாய்ப்பார்கள் அல்லவா? உதயச்சந்திரனை மட்டும் விடுவார்களா? அவர் தங்கியிருந்த கல்லூரியின் விடுதி அறையில் சக மாணவர்கள் நக்கலாக ‘ஜில்லா கலெக்டர்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகாக தமது கல்லூரிக்குச் செல்கிறார். பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காகக் தான் தங்கியிருந்த அதே விடுதி அறைக்குச் சென்று பார்க்கிறார். அப்பொழுதும் ‘ஜில்லா கலெக்டர்’ என்ற எழுத்துக்கள் மங்கிப் படிந்திருந்திருக்கின்றன. ஆனால் அப்பொழுது அவர் அதே ஈரோடு மாவட்டத்துக்கு உண்மையிலேயே ஜில்லா கலெக்டர் ஆகியிருந்தார். மிக இளம்வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வென்றவர்களில் உதயச்சந்திரனும் ஒருவர். 1995 ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியுற்ற போது அவரது வயது 23.
ஈரோடு மாவட்டத்திற்கு எப்பொழுதுமே ஒரு ராசி உண்டு. உதயச்சந்திரன் மாதிரியான அட்டகாசமான ஆட்சியர்கள் அத்திப்பூத்தாற்போல வந்துவிடுவார்கள்.
சமீபத்தில் எங்கள் ஊரைச் சார்ந்த பனைமரம் ஏறு தொழிலாளியின் மகன் ஒருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். குடும்பத்தில் வறுமை. அப்பனைச் சிரமப்படுத்தாமல் ஏதாவதொரு படிப்பில் சேரலாம் என்று நினைத்திருக்கிறார். அப்பொழுது உதயச்சந்திரன்தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர். அந்தச் சமயத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். வங்கிகள் தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ரூபாய் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கல்விக்கடனாக விநியோகம் செய்ய வழிவகை செய்து கொடுத்தவர் அவர்தான். அதில் பலனடைந்தவர்களில் பனைமரத் தொழிலாளியின் மகனும் ஒருவர். இப்பொழுது இஸ்ரோவில் பணியில் இருக்கிறார். ‘கலெக்டர் கல்வித்துறைக்கே வந்துட்டாரு’ என்று அவ்வளவு பூரிப்பு அவருக்கு.
உரமானியம் என்ற பெயரில் அரசாங்கம் உர நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு உரங்கள் நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய ‘விவசாயிகளுக்கே நேரடியாக பணத்தைக் கொடுத்துடுங்க..என்ன உரம் வாங்கணும்ன்னு அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்’ என்று கமிஷன் அடித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்டார். எங்கள் ஊர் விவசாயிகள் இன்னமும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆட்சியராக இருந்த காலத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் சொட்டு நீர் பாசனத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம், நூலகங்களை மேம்படுத்தி பராமரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவற்றை இன்னமும் ஊர்ப்பக்கம் பேசிக் கொண்டிருக்கிற ஆட்களைப் பார்க்க முடியும். இப்படி கிராமப்புற மேம்பாடு, கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் உதயச்சந்திரன்.
மதுரை மாவட்டத்தில் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை மறந்திருக்க முடியாது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்ட பிறகு தேர்தலே நடத்தவிடாமல் செய்து கொண்டிருந்தார்கள். மீறி தேர்தல் நடத்தினால் பதவியேற்ற அதே தினத்தில் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி தலைவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களைத் தொடரச் செய்ததும் உதயச்சந்திரன்தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவுக்கு பிரச்சினை வந்த போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்து ஜல்லிக்கட்டுவை நடத்தினார்.
உதயச்சந்திரன் குறித்து நிறையச் சொல்ல முடியும். வெறுமனே அவரைப் புகழ்வது நோக்கமில்லை.
உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.
ஏன் வாங்க வைக்க முடியாது? தனியார் பள்ளிகளில்தான் ப்ளஸ் ஒன்னிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தைத்தானே படிக்கிறார்கள். இரண்டு வருடங்களாக உருவேற்றப்படும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்களா அல்லது ஒரேயொரு வருடம் மட்டும் எந்தக் கண்டிப்புமில்லாமல் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவார்களா? இத்தகைய தகிடுத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பதினொன்றாம் வகுப்பையும் பொதுத்தேர்வாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் டூவில் மட்டும் படிக்கட்டும். அற்புதமான நடவடிக்கை இது. ஆயிரம் கும்பிடு போடலாம்.
தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படும் சலுகைளை ஒழுங்குபடுத்தி வழிக்குக் கொண்டுவந்தாலே போதும். அரசுப்பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிடவும் எந்தவிதத்திலும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கைகளை அவிழ்த்துவிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது ‘பயிற்சி’ என்று அவர்களை அழைத்து வைத்து கல்வி அதிகாரிகள் தாளிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். பெரும்பாலானவை தேவையற்ற பயிற்சிகள் அல்லது தூக்கம் வரவழைப்பவை. ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உருப்படியான பயிற்சிகளைக் கொடுத்தால் போதும். பயிற்சியரங்கில் எதைச் சொல்லித் தர வேண்டும், சொல்லித்தருகிற ஆளுமை யார் என்பதையெல்லாம் தெளிவுடன் வடிவமைத்து பயிற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தச் செய்வதுதான் இன்றைக்கு முக்கியமான காரியமாகத் தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் ஊழியர்களுக்கான பயிற்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. பயிற்சிகளின் எண்ணிக்கையைவிடவும் effective என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதையே அரசுத்துறைகளும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.
உதயச்சந்திரன் சவாலான தருணத்தில்தான் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தமிழக பாடத்திட்டங்களை மாற்றுவது, நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் தடைகளைக் கண்டறிதல் (Gap analysis) என நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவரால் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர்களின் சங்கங்களை அனைத்து ‘இந்தத் துறையில் என்ன தேவை?’ என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். மேல்மட்ட அதிகாரியொருவர் இறங்கி வந்து பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான எத்தனங்களைத் தொடங்குவதே பாஸிடிவ்வான விஷயம்.
கல்வித்துறையில் அமைச்சராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே பல துறை அமைச்சர் பதவிகளில் இருந்து அனுபவம் பெற்ற மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும்... செயலாளராக நம் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இயக்குநர்களாக செ.கார்மேகம், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இணைந்த அற்புதமான அணி அமைந்திருக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை அரசு வழங்கினால் பெருமளவு சீரமைப்புகளைச் செய்துவிடுவார்கள். நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தமக்குக் கீழாக இத்தகையதொரு அணியை அமைத்துக் கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துக்கள். கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
இவருடைய பேட்சில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி அதிகாரிகளாக வந்த 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஒற்றுமையுடன் எந்தொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இந்திய அளவில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது மிகவும் பெருமையான செய்தியாகும்....
நன்றி ஐயா!!!
வாழ்த்துக்கள்....
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்...
முனைவர் டி.எம். மோகன்.
தலைவர், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை.
நாமக்கல்...