மாறுமா பள்ளி நேரம்?

அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின்
பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.
 தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.
ஒரு பூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.
பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.
இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.
காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.
ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.
இரவு உணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.
மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலை ஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.
இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.
அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.
ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.
மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.
பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.