அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சரஸ்வதி பூஜை, 'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை, முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 
அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும், ஆட்டோ பிரசாரம் மூலம், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களின் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில், செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான மக்கள், சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சமயத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பர் என்பது, அவர்களின் நம்பிக்கை. எனவே, செப்., இறுதி வரை, அரசு பள்ளி ஆரம்ப வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.