விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்

* இஸ்ரோவின் புதிய சாதனையாக, 'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3' ராக்கெட், வெற்றிகரமாக, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.


* அதிக எடை கொண்ட ராக்கெட்டாக, 'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3' உருவாக்கப்பட்டுள்ளது.

* இது, நான்கு டன் செயற்கைக்கோளை, சுமந்து செல்லும் திறன் படைத்தது.

* இதன் திட்ட மதிப்பீடு ரூ. 300 கோடி.

*இதன் எடை 640 டன். 200 முழு வளர்ச்சியடைந்த ஆசிய யானைகளின் எடைக்கு சமம்.

* இந்த ராக்கெட் மூலம், 3,136 கிலோ எடையுடைய, 'ஜிசாட் 19', செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
* மனிதனை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும், அதிநவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய ராக்கெட் ,'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3'.
* மொபைல் போன், இணையதளம், அகண்ட அலைவரிசை உள்ளிட்ட தகவல் தொடர்பு துறையில், புதிய புரட்சி ஏற்படும்.
* பூமியில் இருந்து புறப்பட்ட ராக்கெட், 16 நிமிடங்களில், புவியின் சுற்றுவட்டப் பாதையில், குறைந்தபட்சம், ௧௭௯ கி.மீ., அருகாமையிலும், அதிகபட்சம், ௩௫ ஆயிரத்து, ௯௭௫ கி.மீ., தொலைவிலும், செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.


வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது '


இஸ்ரோவின் புதிய சாதனையாக, அதிக எடையை தாங்கி செல்லக்கூடிய, 'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3'ராக்கெட், வெற்றிகரமாக, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கிருந்து, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி
வருகிறது. இதுவரை, பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம், குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களையும், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம், இரண்டரை டன் எடையுடைய செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி உள்ளது. அதே நேரத்தில், அதிக எடையுடைய செயற்கைக்கோள்களை, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஏரியல் வகை ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரோ, முதன்முறையாக, மனிதனை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும், அதிநவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய, 'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3' என்ற, ராக்கெட்டை தயாரித்து உள்ளது. முழுக்க, உள்நாட்டு தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நேற்று மாலை, 5:28 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் மூலம், 3,136 கிலோ எடையுடைய, 'ஜிசாட் 19' என்ற, தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட ராக்கெட், 16 நிமிடங்களில், புவியின் சுற்றுவட்டப் பாதையில், குறைந்தபட்சம், ௧௭௯ கி.மீ., அருகாமையிலும், அதிகபட்சம், ௩௫ ஆயிரத்து, ௯௭௫ கி.மீ., தொலைவிலும், செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.
இதையடுத்து, இஸ்ரோ நிறுவன இயக்குனர், ஏ.எஸ்.கிரண்குமார், விஞ்ஞானிகளுக்கு கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்தார். விண்ணில் செலுத்திய செயற்கைக்கோளில், நவீன வசதிகள் உடைய, தகவல் தொடர்புக்கான, 'டிரான்ஸ்பாண்டர்கள்' பொருத்தப்பட்டு
உள்ளன. இதன் மூலம், இணையதள சேவைகளை விரைவாகவும், துல்லியமாகவும் பெற முடியும்

இது குறித்து, இஸ்ரோ நிறுவன இயக்குனர் கிரண்குமார் கூறியதாவது: இஸ்ரோ வரலாற்றில், இன்று மகத்தான நாள். 13 ஆண்டுகளாக, இந்த, 'கிரையோஜெனிக் - சி 25' இன்ஜின் படிப்படியாக உருவாக்கப்பட்டு வந்தது. இன்று, 'ஜிசாட் 19' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம், உலக அரங்கில், இஸ்ரோ மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.தற்போது, விண்ணில் செலுத்திய செயற்கைக்கோளில் இருந்து, அடிப்படை தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. இது, நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரோவின் அதிக எடையுடைய ராக்கெட்டாக, 'ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3' உருவாக்கப்பட்டு உள்ளது. இது, நான்கு டன் செயற்கைக்கோளை, சுமந்து செல்லும் திறன் படைத்தது. எதிர்காலத்தில், இந்த வகையான ராக்கெட்டுகளை, அதிகளவில் தயாரிக்கும் பணியில், இஸ்ரோ
ஈடுபடும். தற்போதைய சாதனையால், மொபைல் போன், இணையதளம், அகண்ட அலைவரிசை உள்ளிட்ட தகவல் தொடர்பு துறையில், புதிய புரட்சி ஏற்படும். இந்த சாதனையை, குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே செய்துள்ளன. தற்போது, அந்த வரிசையில், இந்தியா இணைந்துள்ளது. குறிப்பாக, அதிக எடைத்திறன் உடைய ராக்கெட் அனுப்புவதில், முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துஉள்ளது. வருங்காலத்தில், எச்.எல்.வி., வகையான ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், 'மார்க் 3' வகையில், மற்றொரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
நாளை காலை, 9:30 மணி முதல், செயற்கைக்கோளில் இருந்து, முதல் தகவல் பெறப்படும். தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பின், அதன் செயல்பாடு, முழு அளவில் இருக்கும். 'ஆதித்யா, சந்திராயன் 2' ஆகியவையும், அடுத்த ஆண்டு இறுதியில், விண்ணில் ஏவப்படும். 'பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், வரும், 23ல், விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.