மீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்பந்தம்

ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வை மீண்டும் எழுத நிர்ப்பந்தம் செய்வதாக மாணவன் சார்பில் தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஎஸ்இ பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் ஆதித்ய ஏகன் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1வது வகுப்பு முதல் படித்து வருகிறான். கடந்த ஆண்டு அவன் 9ம் வகுப்பு படித்தான். இந்த ஆண்டு  பத்தாம் வகுப்புக்கு அவனை அனுப்பாமல் 9ம் வகுப்புக்கான பாடங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
எனது மகனைப்போல் 41 மாணவர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. மாணவர்களை பிளஸ் 2 வரும் வரை எந்த வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கக்கூடாது என்று சிபிஎஸ்இ பல்வேறு நேரங்களில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பில் இருந்த 141 மாணவர்களில் 35 சதவீத மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்ச்சி பெறவில்லை. 
 தற்போதுள்ள நிர்வாக திறமையின்மைதான் இதற்கு காரணம். அதை சீர்படுத்தாமல் எனது மகனை மீண்டும் 9ம் வகுப்பு தேர்வை எழுத கட்டாயப்படுத்துவது விதி மீறலாகும். எனவே, பாதிக்கப்பட்ட எனது மகன் உள்பட 42 மாணவர்களையும் இந்த பள்ளி இல்லாமல் வேறு பள்ளியில் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகியவை 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் ெசய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.